கல்வி, வேலைவாய்ப்பு, திறன் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விவரங்கள் அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய அரசின் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவரிக்கப்பட்டன.
இவற்றில் பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கென ரூ.94,853.64 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிடவும் ரூ.11 ஆயிரம் கோடி கூடுதல். இருப்பினும், நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பில் 6 சதவீதத்தைக் கல்விக்குச் செலவிட வேண்டும் என்ற கோத்தாரி கமிஷனின் கனவு 50 ஆண்டுகள் கடந்தும் கனவாகத்தான் நீடிக்கிறது.
இதைவிடவும் அவலம் என்னவென்றால், கடந்த ஐந்தாண்டுகளில் கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 17 சதவீதம்வரை கல்வி வளர்ச்சிக்காகச் செலவிடப்படவில்லை என்கிறது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம். பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி கமிஷனை நிறுவுதல், புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலமாக இந்தியக் கல்வியின் அமைப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போடுதல் உள்ளிட்ட பிரம்மாண்டமான செயல்திட்டக் கடலில் கரைந்த பெருங்காயம்தான் இந்தச் சிக்கல்.
கதவைத் தட்டும் தொழில்புரட்சி 4.0
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் கல்வியின் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு குறித்த விவாதம் அண்மைக்காலமாகச் சூடுபிடித்திருக் கிறது. அதிலும் கடந்த ஆண்டே தகவலாகக் கசிந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய செய்திகளில் ஒன்று, வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலவரம். தேசியக் கணக்கெடுப்பு விவரங்களின்படி கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையின் அளவு, 6.1 சதவீதம் (நகர்ப்புறங்களில் 7.8%, கிராமப்புறங்களில் 5.3%) என்ற நிலையை 2018-ல் எட்டியது.
இந்நிலையை மாற்றத் தற்போதைய பட்ஜெட்டில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று தேடினோம். அடுத்த நான்காண்டுகளில் அனைவரின் வீட்டுக் கதவுகளையும் ‘தொழிற் புரட்சி 4.0’ தட்டவிருக்கிறது. இதன்மூலம் ரோபோட்டிக்ஸ் (Robotics), இண்டர்நெட் ஆஃப் திங்கஸ் (Internet of Things-IoT), 3டி பிரிண்டிங் (3D Printing), டேட்டா அனலடிக்ஸ் (Data Analytics), பிக் டேட்டா (Big Data), செயற்கை அறிதிறன் (Artificial Intelligence), குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய தொழில்நுட்பங்கள் உலகை ஆக்கிரமிக்கவிருக்கின்றன.
இவற்றின் மூலமாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமே 28 லட்சம் பணியிடங்கள் உருவாகவிருப்பதாக அண்மையில் வெளியான ப்ராட்பேண்ட் இந்திய மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது. இதை அடிப்படையாக வைத்து நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு ‘பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தின்கீழ் நவயுகத் திறன்கள் (New-Age Skill) பயிற்றுவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இளைஞர்களின் திறன் மேலாண்மைக்காக அரசு தீட்டியிருக்கும் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால், ஏற்கெனவே தொழிற்புரட்சி 4.0-வுக்குள் பாய்ந்து நீந்திக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சில இளம் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சந்தித்தால் களநிலவரம் புரிபடுமல்லவா!
தகவல்தான் பெரியண்ணா!
“பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரபலமாக இருந்த ஜாவா போன்ற கணினி புரோகிராமிங் இன்று பட்டப்பழசாகிடிச்சு. இன்றைய தேதியில் முன்னணியில் இருப்பது python கணினி புரோகிராமிங் மொழி. அதன் அடிப்படையில்தான் பிக் டேட்டா தொழில்நுட்பம் இயங்குகிறது. அதீத வேகத்தில், பன்மடங்கு தகவல்களைச் சேகரித்துவைப்பதுதான் பிக் டேட்டா. இன்றைய தேதியில் உங்களுடைய வாழ்க்கைத் துணையைக் காட்டிலும் உங்களைப் பற்றிக் கூடுதலான தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது கூகுள்தான். காரணம், கூகுள் எந்நேரமும் உங்களைப் பின்தொடர்ந்து, உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தபடியே இருக்கிறது.
இதற்குப் பயன்படுத்தப்படுவது பிக் டேட்டா தொழில்நுட்பமே. கூகுள் மட்டுமல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இப்படி இணையத்தின் வழியாக நீங்கள் எதைத் தேடினாலும் அதைத் தகவலாகப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சேமித்துக்கொள்கின்றன. அவற்றை வைத்துத்தான் நம்மைப் புதியனவற்றுக்கு வாடிக்கையாளராக மாற்றுகின்றன. பிக் டேட்டா தொழில்நுட்பத்தில் கூகுள், அமேசான் உள்ளிட்ட பெருநிறுவனங்களே தற்போது கோலோச்சுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளப் புள்ளியியல் (statistics), Python computer language, துறைசார் அறிவு (domain knowledge) ஆகியவற்றில் கில்லாடியா இருக்கணும்” என்கிறார் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஐந்தாண்டுகளாக பிக் டேட்டா தொழில்நுட்பத்தில் பணியாற்றிவரும் எஸ்.ரோகிணி.
வசதியும் ஆசிரியர்களும் எங்கே?
பிளஸ் 2 முடித்துவிட்டு ஆக்சுவரியல் சயின்ஸ், ஸ்டாடிஸ் டிக்ஸ், கணிதவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது பிக் டேட்டா தொழில்நுட்பத்துக்குள் அடியெடுத்து வைப்பதற்கான முதற்படியாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல இன்றைய பெருவாரியான பொறியியல் படிப்புகளிலும் பிக் டேட்டா ஒரு பாடமாக இணைக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும், இதைப் படித்தவர்களைப் பணியமர்த்துவதில் நடைமுறையில் சில சிக்கல்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரோகிணி.
“ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்குத்தான் டேட்டா சயின்டிஸ்ட் பதவி தற்போது கிடைத்துவருகிறது. அப்படி இல்லையென்றால் இதைக் கற்பிக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் ரூ.3 லட்சம்வரை செலுத்திப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி இருக்கும்போது அரசாங்கம் பிக் டேட்டாவில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி தருவதானால் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைக் கல்வி நிறுவனங்களில் செய்தாக வேண்டும். முதலாவதாக ஆசிரியர்களைத் தயார்படுத்த வேண்டும்” என்கிறார்.
கையாக மாறும் இயந்திரம்
மின்னியல், மின்னணுவியல், புரோகிராமிங் ஆகியவற்றைக் கடந்து ரோபோட்டிக்ஸ் வியாபித்திருக்கும் தொழிற்புரட்சி 4.0 காலத்தை வந்தடைந்திருப்பதை விவரிக்கிறார். சென்னை ஐ.ஐ.டி.யின் ரிசர்ச் பார்க்கில் உள்ள லாமா லேப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் பார்த்திபன்.
“இயந்திரத்தை மனிதர்கள் இயக்குவதி லிருந்து ஒரு இயந்திரம் இன்னொரு இயந்திரத்தோடு உரையாடும் கட்டத்துக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.
அதிலும் ஐம்புலன்களுடன் இயந்திரம் செயல்படும் ஆற்றலை ‘இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க machine learning, deep learning உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கைகொடுக்கிறது. இவை அனைத்தும் மருத்துவம், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட துறைகளில் வேரூன்றத் தொடங்கிவிட்டன. உதாரணத்துக்கு, ஒருவருடைய ரத்தத்தை வைத்து ரோபோ முழு ரத்தப் பரிசோதனையும் செய்து அறிக்கை தயாரித்தல், எக்ஸ்ரே, ஸ்கேனிங் ரிப்போர்ட்டை ஆராய்ந்து ரோபோட்டே நோயைக் கண்டறிதல், ஒருவர் தன்னுடைய செல்ஃபியைப் பதிவேற்றிவிட்டால் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் திரட்டி வங்கி கணக்கைத் தொடங்குதல் – இப்படிப் பல நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இத்தனையும் இயந்திரமயமானால் மனிதர்களுக்கு வேலை ஏது என்கிற கவலை எழத்தான் செய்யும். ஆனால், இவை அனைத்தையும் மனிதர்களும் இயந்திரமும் ஒத்திசைந்து செய்தால் மட்டுமே திறம்படச் செய்யமுடியும். கல்லூரி மாணவர்கள் படிக்கும்போதே புராஜெக்ட்டில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும், Linked-in profile வடிவமைக்க வேண்டும். அப்படித் திட்டமிட்டுத் தயாரானால் இத்துறைகளில் கணிசமான சம்பளத்தோடு பணிவாய்ப்பு பெறலாம்” என்கிறார்.
‘இத்தகைய அதிநவீனத் தொழில்நுட்பங்கள் வேளாண்மைக்கும் பெரிதும் கைகொடுக்கும்’ என்று அரசாங்கம் முன்வைக்கும் கூற்றை பிரபாகரன் ஆமோதித்தாலும், அதனால் பெருவாரியான விவசாயிகள் பயனடைவார்களா என்பது சந்தேகமே என்கிறார். புதிய வேலைவாய்ப்புகள் நம் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் வேலை இருந்தும் இளைஞர் கள் திண்டாடாமல் இருக்க அரசுகள் தேர்தலில் மட்டுமல்ல பட்ஜெட்டிலும் முன்வைக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்.
கட்டுரையாளர், தொடர்புக்கு:
susithra.m@thehindutamil.co.in