இந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு’ (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் டெல்லி, லக்னோ, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் ஏ.க்யூ.ஐ. போர்டுகள் வைக்கப் படும். அவற்றின் மூலம் அந்தந்த நகரங்களின் காற்றின் தரம்பற்றிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய நகரங்களில் காற்றின் தரம்குறித்து அறிந்துகொள்வது என்பது சுகாதாரத்தின் அடிப்படையில் மிகவும் அவசியமான செயல்பாடு. அதேசமயம், பெரும்பாலான நகரங்களில் செயல்படும் கண் காணிப்பு நிலையங்கள் தேவையான அத்தனை சாதனங்களையும் கொண்டிருக்கவில்லை; காற்றின் தரத்துக்கான அளவீட்டு முறை விதிகள் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு நிகராக இல்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப்படுகின்றன. காற்றில் கலந்திருக்கும் இந்தத் துகள்கள், உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையே. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவு கொண்ட துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இவைதான் மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை.
ஏனெனில், சுவாசம் மூலம் உள்ளிழுக்கப்படும் வகையில் நுண்ணிய அளவிலானவை. ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்பது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சராசரி அளவு. அதிகபட்சமாக, கன மீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம் என்று சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஆனால், மோடி அறிவித்திருக்கும் ஏ.க்யூ.ஐ-ன் அளவீட்டின்படி இந்த எண் 50 ஆக இருக்கிறது.
சுகாதார விஷயத்தில் அரசு அலட்சியமாக இருப்பதால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 6,20,000 பேர் மரண மடைகிறார்கள். லட்சக் கணக்கானோரின் உடல்நலம் பாதிக்கப்படு வதுடன் பொருளாதாரரீதியாகவும் இழப்பு ஏற்படுகிறது.
கணிசமான எண்ணிக்கையில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை, டீசல் பயன்பாடு, நிலக்கரி எரிப்பு, கட்டுமானப் பணிகள் உட்பட பல்வேறு காரணிகள் காற்று மாசுபடுதலுக்குக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, டெல்லியில் மெட்ரோ ரயில்கள் பயன் பாட்டில் இருந்தாலும், பெருகிவரும் கார்களின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால், அந்நகரில் காற்று மாசு அதிகமாக இருக்கிறது. டெல்லிதான் உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
எனினும், தனிநபர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக, தேசிய நகர்ப்புறப் போக்குவரத்துக் கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்குறித்தும் அரசு அக்கறை செலுத்தவில்லை.
சுற்றுச்சூழல் விவகாரத்தைப் பொறுத்தவரை, யாருக்கும் ‘நோகாத’ நடவடிக்கைகள் மூலம் சாதித்துவிடலாம் என்று நினைத்தால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம் என்றே அர்த்தம். சூழல் மாசு என்பது வாழ்க்கை மாசு. புதிய திட்டங்களை விடவும் நமக்குத் தேவை துணிச்சலான நடவடிக்கைகளே!
– தலையங்கம் தி இந்து