நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.
பெண்களுக்கான நாப்கின்
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப் போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
செல்லுகாட்டன் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்திவந்த தாதிமார், மாதவிடாய்க் காலத்தில் தம்முடைய துப்புரவுக்கும் இப்பொருளை பயன்படுத்திக்கொண்டனர். அதைக் கொண்டுதான் நாப்கின் உருவானது.
செல்லுலோஸ்களை இஸ்திரிபோட்டு மெலிதான தாள்போல செய்வதற்கு வழிகண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின.
புற ஊதா விளக்கு சிகிச்சை
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்துவந்த ஜெர்மனியில் பாதியளவு குழந்தைகள் ரிக்கெட் என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன.
பாதரஸ குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புற ஊதா விளக்கொளியில் அந்தப் பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி என்பவர் கண்டுபிடித்தார்.
விட்டமின் டி சத்து குறைவாக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது, எலும்பு வளர்ச்சிக்கும் வலுவுக்கு விட்டமின் டி அவசியம் என்பதெல்லாம் பிற்பாடுதான் கண்டுபிடிக்கப்பட்டன.
தேயிலை துணிப் பொட்டலம்
துணிப் பையில் அனுப்பிய தேயிலை கொதிக்கும் தண்ணீரில் விழ வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே தேனீர் போடலாம் என்பது 1908ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தம் நடந்த நேரத்தில் மோதல் களங்களில் உள்ள சிப்பாய்களுக்கு சின்ன துணிப் பொட்டலங்களாக தேயிலையை அனுப்பினால் அவர்கள் எளிதாக தேனீர் தயாரிக்க வசதியாக இருக்கும் என நினைத்து ஜெர்மன் நிறுவனம் ஒன்று டீ பேக்-களை உருவாக்கியது.
ஸிப்
ஆடையின் திறந்த பகுதிகளை எளிதாய் மூடித்திறப்பதற்கு பலவகை கொக்கிகள் பொத்தான்கள் முயன்றுபார்க்கப்பட்டுவந்த நேரத்தில், சின்னக் கொக்கிகளை வரிசையாகக் கொண்ட இரண்டு பட்டிகளை ஒரு இழுக்கும் பொறி மூலமாக எளிதாக மூடித் திறக்க முடியும் என்பதை சுவீடனில் பிறந்த அமெரிக்க குடியேறியான கிடியன் சண்ட்பேக் 19ஆம் நூற்றாண்டின் பாதிலியேலே கண்டுபிடித்திருந்தார்.
ஸிப்கள் பெரிய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்டது முதலாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க இராணுவத்தினரின் சீருடைகளிலும் காலணிகளிலும்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று சொல்லப்படும் துருபிடிக்காத எஃகு, சோயா இறைச்சி மாதிரியான வேறு சில விஷயங்கள் பரவலான புழக்கத்துக்கு வந்ததும் முதலாம் உலகப்போர் காலத்தில்தான்.
பிபிசி