தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன். பகத் சிங்கின் மரணத்தில் இன்றுவரை சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. ‘காந்தி விரும்பியிருந்தால் பகத் சிங்கின் மரண தண்டனையை ரத்துசெய்திருக்க முடியும்; அரை மனதுடன்தான் அவர் முயன்றார், ஏமாற்றினார்’ என்பது போன்ற விமர்சனங்கள் இன்றுவரை அவர்மீது வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் எந்த அளவுக்கு நியாயமானவை?
பகத் சிங்கின் மரணத்துக்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான் காந்தி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டினார் என்பது பொய். பகத் சிங் கைதுக்கு ஒரு நாள் முன்னர், மே 4, 1930 அன்றே காந்தி வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லாகூர் சதி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறார். “குறுக்கு வழியில் விசாரணையை முடிக்கும் முயற்சி என்றும், இது அடக்கு முறை சட்டத்துக்கு ஒப்பானது” என்றும் குற்றம்சாட்டுகிறார்.
பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 5-ல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காந்தி, வைஸ்ராய் இர்வினோடு பகத் சிங்குக்காக மன்றாடியபடியே இருந்திருக்கிறார். காந்தி மற்றும் இர்வின், இருவரின் குறிப்புகளை நாம் வாசிக்கும்போது, பகத் சிங் உள்ளிட்டோரின் மரண தண்டனையைத் தள்ளிப்போடவோ இடைநிறுத்தவோ காந்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார் என்பது தெரிகிறது. இதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காந்தி, உண்மையில் தண்டனையைத் தள்ளிப் போடத்தான் முயன்றாரா? இதற்கான காரணங்களை, உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக நாம் அணுக வேண்டும்.
காந்தியின் திட்டம்
பிரிவி கவுன்சில் முறையீடு மரண தண்டனையை ரத்து செய்ய மறுத்தது. வைஸ்ராய் நினைத்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்னும் சூழலில் பிரிவி கவுன்சில் முடிவை மீறித் தன்னால் செயல்பட முடியாது என வைஸ்ராய் மறுத்துவிட்டார். சட்ட வல்லுநரான காந்தி, சட்டரீதியிலான எல்லா வாய்ப்புகளையும் அலசிய பின்னர், பொதுமக்களின் கருத்துக்கு வலுவளித்து, அரசை நிர்ப்பந்திக்கச் செய்வதே ஒரே வழி என்னும் முடிவுக்கு வருகிறார். அவருக்கு மற்றொரு திட்டமும் இருந்தது. மார்ச் 23 அன்று வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் “இந்த மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும் பட்சத்தில், புரட்சிப் படையினர் ஆயுதங்களைக் கைவிடத் தயாராக உள்ளனர் என்று என்னிடம் உறுதியளித்ததை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்” என்று எழுதுகிறார். சிறையில் இருந்த பகத் சிங் மற்றும் சக போராளிகளிடம் அத்தகைய உறுதிமொழியைப் பெறுவதற்கு ஆசஃப் அலி மூலம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. போதிய அவகாசம் கிடைத்தால், அந்த உறுதிமொழியைக் கொண்டு அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்க முடியும் எனக் கருதினார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
காந்தியின் விமர்சகர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. பகத் சிங்கையும் அவரது சகாக்களையும் மரண தண்டனையி லிருந்து காப்பது காந்திக்கு நன்மையே விளைவிக்கும். மரண தண்டனையை ரத்துசெய்ய முடியாமல் போவது பொதுமக்க ளையும், காங்கிரஸின் இளைஞர்களையும் கோபப்படுத்தும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாயகத் தன்மையின் காரண மாக வன்முறைப் புரட்சி பற்றிய நம்பிக்கைகளை அது பரவலாக்கும் அபாயமும் உண்டு என்பதையும் அவர் அறிந்திருந்தார். சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான வன்முறை சக்திகளுக்கு எதிரான அவரது போராட்டத்தில் அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். ஒருவேளை காந்தியின் முயற்சியால் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரின் மரண தண்டனையும் ரத்துசெய்யப்பட்டிருந்தால், வன்முறைக்கு எதிராக அகிம்சை அடைந்த வெற்றியாகவும், புரட்சியாளர்கள் மீது காந்தி கொண்ட தார்மிக வெற்றியாகவுமே அது சித்தரிக்கப்பட்டிருக்கும்.
காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இந்தப் பிரச்சினையை முன்நிபந்தனையாக விதித்திருக்கலாம்தான். ஆனால், ஆரம்பத்திலிருந்தே காந்தி அதற்கு ஒப்பவில்லை. ஒரு அடிமை தேசத்தின் வரலாற்றில் எப்போதாவது ஒருமுறை மட்டுமே அபூர்வமாக நிகழக் கூடியதும், கோடிக் கணக்கான இந்தியர்களுக்குப் பயனளிக்கக் கூடியதுமான முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் சமயத்தில் அதை வீணாக்கிவிட அவர் விரும்பவில்லை.
ஆளுநர், அதிகாரிகளின் மிரட்டல்
சாண்டர்சின் மரணமும், அதையொட்டி எழுந்த வன் முறையும், பகத் சிங்கின் செல்வாக்கும் இந்தியாவில் பணி புரியும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாக அவர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில், காந்தி யின் தொடர் கோரிக்கைகளுக்கும் பொதுமக்களின் நிர்ப்பந்தத் துக்கும் அடிபணிந்து, தண்டனையை நிறுத்திவைக்கும் முடிவை நோக்கி வைஸ்ராய் இர்வினின் மனம் ஊசலாடியது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால், பஞ்சாப் மாகாண ஆளுநரும் அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். வேறுவழியின்றி அவர்களுடைய நிர்ப்பந்தத்துக்கு வைஸ்ராய் பணிந்தார். திட்டமிட்ட தேதிக்கு முதல் நாள் அதாவது 23-ம் தேதியே அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
முன்கூட்டியே அவர்கள் தூக்கிலிடப்படுவதுகுறித்து அறியாத காந்தி, மார்ச் 23 அன்று வைஸ்ராய்க்கு இறுதிக் கட்டமாக ஒரு கடிதத்தை எழுதுகிறார். அதில், பகத் சிங்கின் தண்டனையை ரத்துசெய்ய ‘பொதுமக்களின் விருப்பு, உள்நாட்டு அமைதி, புரட்சியாளர்களை அமைதிக்குத் திருப்புதல், சந்தேகத்தின் பயன்’ என நான்கு காரணிகளைப் பட்டியலிடுகிறார். கடிதத்தின் இறுதியில் ‘கருணைக்குத் தோல்வியில்லை’ எனும் மகத்தான சொற்களுடன் முடிக்கிறார். ஆனால், அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. காந்தி பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்.
பகத் சிங் எதை விரும்பினார்?
இவையெல்லாம் ஒருபுறம் எனில், பகத் சிங்கும் அவரது சகாக்களும் உண்மையில் எதை விரும்பினார்கள் என்ற கேள்வியும் முக்கியமானதே. பகத் சிங்கும் சகாக்களும் மார்ச் 20, 1931 அன்று பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய ‘கோரிக்கை’ மடல் அதைத் தெளிவாக்குகிறது:
‘உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நாங்கள் உங்கள் மீது போர் தொடுத்தவர்கள், ஆகவே நாங்கள் போர்க் கைதிகள். ஆகவே, எங்களை நீங்கள் அப்படியே நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அதாவது, எங்களைத் தூக்கிலிடாமல் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கோருகிறோம்.’
பகத் சிங், தன் வீரமரணத்தையே ஆயுதமாகக் கொண்டு புரட்சித் தீ ஏற்றிவிட முடியும் என்று கனவுகண்டார். பழி தீர்க்கத் துடிக்கும் ஆங்கிலேய அதிகார வர்க்கம், தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள முயலும் ஆங்கிலேய அரசு, சமரசமற்று வீரமரணத்தை விழைந்த புரட்சி நாயகர்கள் என்று பல்வேறு காரணிகள் இருக்க, உண்மையில் அவர்களுடன் முரண்பட்ட கொள்கைகள் கொண்ட காந்தி இதற்கு மேல் என்னதான் செய்திருக்க இயலும்?
காந்தி – அம்பேத்கர், காந்தி பகத் சிங், காந்தி நேதாஜி, நேரு – படேல் என அவரவர் அரசியல் சார்புக்கு ஏற்ப எதிரெதிர் நிலைகளை உருவாக்கி, ஒரு தரப்பை எதிரியாகவும் துரோகியாகவும் சித்தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்திய விடுதலை என்பது பல்வேறு நிகழ்வுகளின், விசைகளின் தொகுப்பில் மலர்ந்த மகத்தான நிகழ்வு. எவரையும் சிறுமைப்படுத்துவதன் வழியாக மற்றவரைப் பெருமைப்படுத்திவிட முடியும் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் இழிவன்றி வேறில்லை.
– சுனில் கிருஷ்ணன், தி இந்து
ஆயுர்வேத மருத்துவர் ‘காந்தி இன்று’ (www.gandhitoday.in) இணையதளத்தின் ஆசிரியர்.