ஐதராபாத் : நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து, நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் தலைவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியின் போது, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று புனிதநீராடினர். அப்போது தங்கள் குழு நடத்திய ஆய்வில், தண்ணீரில், குரோமியம் 6 இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வீரியமுள்ள நச்சுப்பொருள் ஆகும். 1 மி.லி,.தண்ணீரில், 1என்.ஜி. அளவிற்கு குரோமியம் 6 இருப்பது கண்டறியப்பட்டது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்காக, தான் சார்ந்த துறை, புளூரைடு சோதனை செய்யும் ஆய்வுமுறையை கண்டுபிடித்துள்ளோம். குறைந்த மதிப்பிலான இந்த சோதனைமுறை, துல்லியமான முடிவுகளை தரக்கூடியது. மத்திய அரசு, தங்களின் இந்த சோதனைமுறையை, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அவர்களின் மூலம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககளை துரிதப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறையின் மற்றொரு பிரிவின் உயர் அதிகாரியான சகாயம் கூறியதாவது, கங்கை நதி இந்தளவிற்கு மாசுயடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கையில் நேரடியாக கலக்கின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இதன்காரணமாகவே, கங்கை நதியின் நீராடினால், புற்றுநோய் ஏற்பட வாயப்பு இருப்பதாக தாங்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பொருட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்துள்ளதோடு மட்டுமல்லாது, நாட்டின் மற்ற நீர்நிலைகளையும் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்