மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்குக் காற்று மாசு தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் காற்று மாசு காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாகத் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பட்டாசுகள்
டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த முடிவுகளை எதிர்த்து வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடையை விதிக்காமல், கூடுதல் கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துள்ளன.
பட்டாசின் விபரீதங்கள் !!!
மேற்கு வங்கத்தில் தடை
இந்நிலையில், காற்று மாசை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் பட்டாசுகளை வெடிக்கவும் அதன் விற்பனைக்கும் முழுமையாகத் தடை விதிக்க கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரோஷ்னி என்பவர் கொல்கத்தா ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மாநிலத்தில் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்துக் கடந்த அக். 29இல் உத்தரவிட்டது.
கொல்கத்தா ஐகோர்ட்
தூர்கா பூஜை தொடங்கி தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் வெடிக்கத் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் ஐகோர்டின் இந்த தீர்பு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு மாறாக உள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பட்டாசு உற்பத்தியாளர்கள்
வழக்கு விசாரணையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் பட்நாகர், “பசுமை பட்டாசுகளை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 3 உத்தரவுகளும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளன. இருப்பினும் அதைக் கருத்தில் கொள்ளாமல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் பட்டாசுகளுக்கு முழு தடை விதித்துள்ளது. காற்றின் தரம் மிதமானதாக அல்லது சிறப்பாக இருந்தால், பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது” என வாதிட்டார்.
மாநில அரசுக்கு அறிவுறுத்தல்
மேலும், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் அது தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.
இந்த பட்டாசு வெடிப்பால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?