ஒன்றிய அரசின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்காக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இதில், நிதிஷ், பாஜ முகாமில் தஞ்சம் அடைந்துவிட்டார். இதனால் பாதிப்பு இல்லை என்றாலும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டணி தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொகுதி பங்கீட்டை இம்மாத இறுதிக்குள் பேசி முடிக்க வேண்டும். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. இதையடுத்து மீண்டும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து பேச தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளோம், தனித்து போட்டியிட்டு பாஜவை வீழ்த்துவோம் என கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த தேர்தல் இந்தியா கூட்டணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இத்தனை சீட் வேண்டும் என அழுத்தம் கொடுக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக வைத்து கொள்ள வேண்டும்.
பாஜ மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் மதச்சார்பின்மை, சோசலிசம் காணாமல் போய்விடும் என கிராம மக்கள் வரை தெரிந்துள்ளது. மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் புதிய அவதாரமான புல்டோசர் டெமாக்ரசி பார்முலா மூலம் மாநில கட்சிகளை நசுக்கும். ஏற்கனவே எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு, நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநில எம்பிக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை உள்ளது. ஒரு பக்கம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைப்பது, மறுபுறம் வலிமையாக உள்ள கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மூலம் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது என்ற ரீதியில் ஒன்றிய அரசு செயல்படுவதாக கடும் விமர்சனம் உள்ளது.
அதன்படி சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 10 முறை சம்மன் அனுப்பியது. கவர்னர் மாளிகைக்கு சென்று ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை பார்த்தால் வன்மம் தெரிய வருகிறது. அடுத்த இலக்காக புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகரத்தில் மாநில கட்சி, ஆட்சியில் இருப்பது ஒன்றிய அரசுக்கு உறுத்தலாகவே இருக்கிறது. அதனால் கெஜ்ரிவாலையும் கைது செய்தால் வரும் நாடாளுமன்ற தேர்தல் எளிதாக இருக்கும் என கணக்கு போடுகிறது பாஜ. மதச்சார்பின்மை, சோசலிசத்தை காக்க வேண்டும் என்றால் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் வெற்றி என்ற இலக்கை எண்ண வேண்டும். இந்தியாவில் இருந்து புல்டோசர் டெமாக்ரசியை அப்புறப்படுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.