கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன.
இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன.
மற்ற துறைகள் நவீனத்துக்கு மாறிவிட்ட நிலையில், விவசாயமும் நவீன முறைக்கு மாறினால்தான் வளர்ச்சி பெறும், உற்பத்தி பெருகும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், மற்ற துறைகளும், விவசாயமும் ஒன்றல்ல என்பதுதான் உண்மை. ரசாயன உரங்களால் விவசாய உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விவசாய உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய ரசாயன உரங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் பாதிப்புகளே அதிகரித்துள்ளன.
ரசாயன உரங்களால் நிலத்தில் உள்ள மண் புழுக்கள் இறக்கின்றன. நிலம் பாழடைகிறது. உணவு தானியத் தாவரங்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது.
ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் குறைந்து, மண்ணில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மண் வளம் குறைந்து உற்பத்தித் திறனும் குறைந்து விட்டது.
பயிர்களுக்கு இடப்படும் ரசாயன உரம் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதுவே ஒருவகை பாதிப்புதான். இதைவிட அதிகப் பாதிப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படுகிறது.
அதிக வீரியம் கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை செடிகள் மீது தெளிக்கின்றனர். செடிகளின் மீது விழும் பூச்சிக்கொல்லி மருந்து, செடி பயிரிடப்பட்டுள்ள நிலத்திலுள்ள புல்களிலும் படிகின்றன.
புல்களின் வேர்கள் மருந்தை உறிஞ்ச, மாடுகள் அந்தப் புல்லை மேய்கின்றன. இந்தப் பசுக்களின்{பால், பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது. புல், பசு, மனிதர்கள் எனப் பல நிலைகளைக் கடந்து அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம், குழந்தையின் உடலுக்கும் சென்றடைகிறது.
அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களை இடுவதால் நிலம், பயிர், அதில் விளையும் உணவு தானியங்கள் அனைத்துமே விஷமாகின்றன. மேலும், நிலத்தில் கலந்துள்ள உரம் மற்றும் வேதிப்பொருள்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கலந்து விஷமாகின்றன.
இதனால், பாசிகள் படர்ந்து நீர் நிலைகளில் பிராணவாயு குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக நீர்நிலை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ரசாயன உரங்களால் மண் புழுக்களும் விவசாயத்துக்கு நன்மை செய்யும் வண்டு, தேனீ, பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளும் இறக்கின்றன. இதுவும் விவசாய உற்பத்தி குறையக் காரணமாகும். இவை பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்தச் சேர்க்கை வழியில்தான். அரிசி, கோதுமை போன்ற புல்வகைத் தாவரங்களுக்கு பூக்கள் மிகச் சிறியதாக கண்ணுக்குப் புலப்படாத அளவில் இருக்கும். மென்மையான காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்துச் செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.
ஆனால், பல்வேறு காய் – கனிகளின் சாகுபடியில் மகரந்தச் சேர்க்கை அவசியமாகும். உலகில் 90% உணவுத் தேவையை நிறைவு செய்யும் நூறு தாவரங்களில் 71 தாவரங்கள் பூச்சியினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றன.
மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படுகிறது. மண் புழுக்கள் பூமியிலிருந்தே தம் உணவை உள்கொண்டு கழிவுகளை அளிக்கின்றன. இக்கழிவிலிருந்து அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் கிடைக்கின்றன.
மண் புழுக்கள் மேலும் கீழும் பலமுறை சென்று வருவதின் மூலம் நிலத்தை இடைவிடாது உழுகின்றன. இதனால், பயிர்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கின்றன.
மண் புழுக்கள் 15 அடி ஆழம் வரை சென்று வசிக்கக்கூடியவை. 1,000 மண் புழுக்கள் ஒரு நாளில் மேலும் கீழுமாகச் சென்று உழுது நிலத்தைப் பண்படுத்துவது, ஒரு ஜோடி மாடு ஒரு நாளில் செய்யும் வேலைக்குச் சமம்.
அதேசமயம், மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும், மாடுகளின் சாணம், சிறுநீர் போன்றவை மண்ணுக்கும் உரமாகும்.
ஆனால், டிராக்டர் கொண்டு உழும் போது மண் உள்ளே போகும். அதனால், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இறந்து விடுகின்றன. இதனால் மண் செழுமை நீங்கும். மண் புழுக்கள் மட்டுமன்றி, விவசாயத்துக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயிரிகளும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இறக்கின்றன.
பொதுவாக, இயற்கை விவசாயம் என்பது இயற்கையான சுற்றுச்சூழல், நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தின் வளத்தைக் காப்பாற்றுவதாகும்.
மேலும், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டால் மண் வளம், ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் பயிர் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இயற்கை விவசாயத்திற்கு முதலில் ரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிப்பது, பன்றி எரு, கோழி எரு, தென்னை நார்க் கழிவு எரு போன்றவற்றையும், மண் புழு உரம், நுண்ணுயிர் உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி இயற்கை விவசாயம் மேற்கொள்ளலாம்.
By
-தினமணி