பிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். இரண்டு குற்றச்சாட்டுகள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன: “விமானங்களுக்கு அதீத விலை கொடுக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கு வேண்டிய ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைத் தருமாறு சலுகை காட்டப்பட்டிருக்கிறது.”
“விலை விஷயம் ராணுவ ரகசியம்” என்று மோடி அரசு கூறுவதும், இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் சார்பில் கையெழுத்திட்டவரான அன்றைய அதிபர் ஒல்லாந், “தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை, தயாரிப்பில் இந்தியத் தொழில் கூட்டாளியாகச் சேர்க்க வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டது” என்று பேட்டியளித்ததும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன. இந்திய அரசு, பிரான்ஸ் அரசு, தஸ்ஸோ நிறுவனம் ஆகியவை குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளன என்றாலும், இதுவரையிலான விளக்கங்கள் எதுவுமே குற்றச்சாட்டுகளைத் தகர்க்கும் வகையில் இல்லை. முக்கியமான கேள்விகள் என்னவென்றால், ஒல்லாந் கூறியதைப் போல ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரியுங்கள் என்று இந்திய அரசு கோடி காட்டியதா? உண்மையென்றால், எந்தவிதத்தில் அது கூறப்பட்டது? அதைக் கூறியவர் யார்? ஒல்லாந் முழுமையாக விவரங்களை வெளியிடவில்லை. ஆகையால், இதுகுறித்துப் பேச வேண்டிய, நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இந்தியப் பிரதமருக்கே இருக்கிறது.
ரஃபேல் போர் விமானத்தின் தாக்கும் திறன் குறித்து யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் கூறப்பட்டதைப் போல, இத்தனை கோடி ரூபாய் இன்ன கணக்கில் போடப்பட்டிருக்கிறது என்றும் யாரும் கூறிவிடவில்லை. இந்த பேரம் எந்த முறையில் நடத்தப்பட்டது என்பதைச் சுற்றித்தான் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும். 2015 ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய பயணம் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காக 36 விமானக் கொள்முதல் குறித்துத் திடீரென அறிவித்தபோது அரசின் மூத்த அதிகாரிகளைக்கூட அந்த அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியது. காரணம் அவர்கள் காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் தொடங்கிய 126 விமானங்களை வாங்குவதற்கான பேரத்தை முடிப்பதற்காகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆக, இந்த ஒப்பந்த உருவாக்கத்தில் வழக்கமான ஒப்பந்தங்களைக் காட்டிலும் கூடுதலான பொறுப்பு மோடிக்கு இருக்கிறது. புதிய அறிவிப்பு இன்று ஏராளமான சந்தேகங்களுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் வித்திட்டிருக்கும் நிலையில் இனியும் யாரும் மௌனம் காக்க முடியாது. வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. ஊழல் நடக்கவில்லை, தவறுகளுக்கு இடமில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்?