சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் முதல் இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வறிக்கை வரை பல்வேறு கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில், 2025-26 ஆண்டின் கூடுதல் செலவிற்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார். அப்போது, அவர் கல்வி, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், மாநில அரசு எவ்வாறு அரசின் திட்டங்களை மக்கள் பாதிக்காத வகையில் திறம்பட செய்யலாற்றிவருகிறது என்பதைப் பற்றியும் விவரித்தார்.