இந்தியாவின் தலைநகரான டெல்லி, இதுவரை பார்த்திராத ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள இரு மாநில முதல்வர்கள் அடுத்தடுத்த தினங்களில் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, தனது மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரை டெல்லி ஜந்தர் மந்தர் அழைத்துச்சென்று நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியுள்ளார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் இணைந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்கக்கோரி நேற்று தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். தங்கள் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்த்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை விரைவாக துவக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக எம்.பி.,க்கள், குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில், ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று கருஞ்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் கோரிக்கைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
அதாவது, நாட்டில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும் மாநிலங்களிடம் இருந்து எடுத்து, நிதி ரீதியாக பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது என இந்த மாநிலங்கள் கூறவில்லை. மாறாக, ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்கு மாற்றும்போது, சிறந்த மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்ற வேண்டும் என்பதுதான் இம்மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது. இதைத்தான், இம்மாநில முதல்வர்கள் தங்களது அறிக்கை வாயிலாகவும், பேட்டி மூலமாகவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறார்கள்.
உண்மை கசக்கும் என்பதுபோல இவர்களது இந்த நியாயமான கோரிக்கை, ஒன்றிய அரசுக்கு பெரும் கசப்பாக தெரிகிறது. இது, பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் தூக்கத்தை கலைத்துவிடுகிறது. “ஒன்றிய அரசின் பட்ஜெட் அளவு அதிகரிக்கும்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கான மானியங்களும் அதிகரிக்க வேண்டும்’’ என்பது நடைமுறை. ஆனால், அது தற்போது நடப்பதில்லை. மாநில முதல்வர்கள், தலைநகர் டெல்லியில் களம் இறங்கி நடத்தும் இந்த போராட்டம், வெறும் அரசியல் அல்ல. இது, பா.ஜ மற்றும் எதிர்கட்சிகள் இடையேயான போட்டியும் அல்ல. இது, மாநில நலனையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க நடக்கும் யுத்தம்.
இந்த யுத்தம் விரிவடைந்தால், ஒன்றிய அரசு தாங்காது. முந்தைய பிரதமர்களின் ஆட்சி காலத்தில் மாநில முதல்வர்கள் யாரும் டெல்லி சென்று போராட்டம் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை. ஆனால், பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மாநில உரிமை பறிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் என ஒன்றிய அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இந்த போக்கு, ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. நாட்டில், சர்வாதிகாரம் தலைதூக்கினால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அதற்கு வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இனி, காலம் பதில் சொல்லும்.