கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் 215 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தொகுதிகளில் பாஜ கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைவது உறுதி செய்யப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 294 தொகுதிகளில் 215 தொகுதிகளையாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைவர்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முழக்கமிட்டர்கள்.
ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளை வெல்வோம் என்றனர். ஆனால் அவர்களால் பெரும்பான்மையை கூட பெற முடியவில்லை. 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைவோம். இந்த முறை பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
* பாஜவில் சேருகிறாரா அபிஷேக் பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ‘‘நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான சிப்பாய். எனது தலைவர் மம்தா பானர்ஜி. நான் பாஜவில் சேருகிறேன் என்று கூறுபவர்கள் வதந்தியை பரப்புகிறார்கள். தலை துண்டித்த பின் கூட நான் முதல்வர் மம்தா பானர்ஜி ஜிந்தா பாத் என்று கூறுவேன். இப்போதெல்லாம் செய்திகளில் வெளிவருவது முழுவதும் பொய். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற போலி செய்திகளை சுயநலத்துக்காக பரப்புபவர்களை நான் அறிவேன்” என்றார்.
* தேர்தல் ஆணையம் முன் தர்ணா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘தேர்தல் ஆணையத்தின் ஆசிர்வாதத்துடன் பாஜ வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாளுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. நான் 26நாட்கள் உண்ணாவிரதப்போராட்டம்(2006ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு இயக்கத்தின்போது) நடத்த முடிந்தால், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் ஒரு இயக்கத்தை தொடங்க முடியும். தேவைப்பட்டால் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யவும், போலி வாக்காளர்களை நீக்கவும் கோரி, தேர்தல் அலுவலகம் முன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
The post அடுத்த ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.