“லட்சக்கணக்கான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அது நாள்பட்ட நோயாக மாறிவருகிறது; நீரிழிவு நோய், இதயப் பிரச்சினைகளை உடல் பருமன் அதிகரிப்பதுடன், சில வகைப் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது” என உடல் பருமன் குறித்து, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 32 வருடங்களாக உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேநேரத்தில், ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏறுமுகத்தில் இருப்பதாக மருத்துவ இதழான ‘தி லான்செட்’ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.