திருமலை: பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியவர். இவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிரசாத் சென்னையில் உள்ளார். மகள் கேரளாவில் படித்து வருவதாக தெரிகிறது. அவரை ஐதராபாத் வரும்படி கல்பனா அழைத்துள்ளார். அவர், வரமாட்டேன். கேரளாவில்தான் வசிப்பேன் என்று கூறினாராம். இதனால் தாய்-மகள் இடையே போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, கல்பனா மன அழுத்தம் குறைக்க அவ்வப்போது பயன்படுத்தும் மாத்திரையை அதிகளவில் உட்கொண்டுள்ளார். இதனால் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர் பிரசாத், சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு போன் செய்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால் கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்க செயலாளருக்கு தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். எந்தவித பதிலும் வராததால் குட்கட்பள்ளி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். போலீசார் சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி இருப்பது தெரிந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதற்கு பிறகு இன்று காலை நினைவு திரும்பியதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்புவார் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
The post அதிகளவு மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பிரபல பாடகி கல்பனாவுக்கு நினைவு திரும்பியது appeared first on Dinakaran.