புதுடெல்லி: சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தனர். அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார் எனத் தெரிவித்திருந்தார். மேற்கண்ட பேச்சு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக பாபு முருகவேல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு போவது என்பது இயல்பான ஒன்றாகும்.
அதனால் இந்த விவகாரத்தில் அப்பாவு பேசியதை அவதூறு என்று கூறுவதை ஏற்க முடியாது. இதையேதான் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவை தெளிவாக கூறுகிறது. எனவே வழக்கறிஞர் பாபு முருகவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என்று உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர் பாபு முருகவேல் தரப்பு வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக கோரிக்கை வைத்தார். அதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post அதிமுகவினர் திமுகவில் சேர தயாராக இருந்தனர் சபாநாயகர் அப்பாவு பேச்சில் அவதூறு எதுவும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.