சத்தர்பூர்: மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், ‘‘அடிமை மனநிலை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இந்திய மத நம்பிக்கைகளை கேலி செய்கின்றனர்’’ என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். உபி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகின. கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் டெல்லி ரயில் விபத்தில் பலி எண்ணிக்கையை ஒன்றிய அரசு திட்டமிட்டு மறைப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் புற்றுநோய் மருத்துவமனையை உள்ளடக்கிய ஸ்ரீ பாகேஸ்வர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது:இப்போதெல்லாம் நமது மதத்தை கேலி செய்யும் தலைவர்கள் குழுவாக இருப்பதை பார்க்கிறோம். அவர்கள் ஒற்றுமையை சீர்குலைத்து மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். அந்நிய சக்திகளும் இவர்களை ஆதரிப்பதன் மூலம் நாட்டையும், மதத்தையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதை காணலாம். இந்து மத நம்பிக்கையை வெறுப்பவர்கள் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அடிமை மனநிலை கொண்ட இப்படிப்பட்ட மக்கள் நமது நம்பிக்கைகள், கோயில்கள், துறவிகள், கலாச்சாரம், மரபுகளை தாக்குகிறார்கள். இந்த மக்கள் நமது பண்டிகைகள், நம்பிக்கைகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இயல்பாகவே முற்போக்கான நமது மதம் மற்றும் கலாச்சாரத்தின் மீது சேற்றை வாரி வீசும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளது.144 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருவது ஒற்றுமையின் மகா கும்பமேளா. அங்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறார்கள். துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினரின் சேவை பாராட்டுக்குரியது.
கும்பமேளா வரும் பக்தர்கள் அவர்களின் சேவையை மனதார பாராட்டுகிறார்கள். காலம் காலமாக, இந்து மடங்கள், கோயில்கள் ஆகியவை வழிபாட்டு மற்றும் நம்பிக்கையின் மையங்களாகவும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்காகவும் சேவை செய்து வருகின்றன. இந்து ஞானிகள் யோகா மற்றும் அறிவியல் அறிவை வழங்கினர். உலகம் யோகாவைப் பின்பற்றுகிறது. யோகா இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளது. நமது தேசியக் கொடியை உயரப் பறக்கச் செய்துள்ளது. மோடி உங்கள் மகன், நான் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து சேவை செய்வேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post அந்நிய சக்திகளின் ஆதரவுடன் மத நம்பிக்கையை கேலி செய்யும் அடிமை மனநிலை கொண்டவர்கள்: மபியில் பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.