அமர்நாத்: அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதற்காக 533 வங்கிக் கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இமயமலையின் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்வார்கள். இந்த குகையில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கம், சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுகிறது.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரை குறித்த முக்கிய தகவல்கள், முன்பதிவு நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, வெறும் ஐந்து நாட்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர். வரும் ஜூலை 3 முதல் தொடங்கவுள்ள இந்த யாத்திரையானது வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த யாத்திரை மொத்தம் 47 நாட்கள் நடைபெறும். நாடு முழுவதும் 533 வங்கிக் கிளைகளில் யாத்ரீகர்களுக்கான முன்பதிவு செயல்முறை நடைபெற்று வருகிறது. அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான JKSASB.nic.in-ல் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2024ல், யாத்திரையின் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர்; மொத்தம் 3.5 லட்சம் பேர் பதிவு செய்தனர்.
கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்பு குழுக்கள் பயிற்சி பெற்று வருகின்றன. முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு, அவசரநிலைகளுக்கு தயாராக உள்ளனர். பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள், தங்குமிடங்கள், மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post அமர்நாத் யாத்திரை தொடங்குவதால் 5 நாளில் 2 லட்சம் பேர் முன்பதிவு: 533 வங்கி கிளைகளில் ஏற்பாடு appeared first on Dinakaran.