ஐதராபாத்: அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகளால் இனிமேல் அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடையாது என்ற நிலைக்கு இந்திய பெற்றோரின் கனவுக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்கு முன்பு மற்றும் பின்பு என அமெரிக்கத் திருமண உறவுகளின் நிலை மாறிவிட்டது. டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால், ஏற்கெனவே முடிவான திருமண உறவுகள் கூட ரத்து செய்யப்படுகின்றன. நீண்ட காலமாக அமெரிக்காவில் வசித்து, கிரீன் கார்டு பெற்றவர்களுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. பொதுவாக, ஏழு ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் வசித்தால் கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைய கெடுபிடிகளால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் கூட பீதியில் உள்ளனர்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இப்போது அங்கு முழு பாதுகாப்பு என்ற சூழல் உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை, டாலரில் சம்பளம், திருமணமானால் இருவரும் சேர்ந்து நிறைய சம்பாதிக்கலாம், கார்கள், பங்களாக்கள் எல்லாம் வந்துவிடும், குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்களாக மாறுவார்கள் என்றெல்லாம் கற்பனை உலகில் பலர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்தியாவில் எதுவும் இல்லையென்றாலும், அமெரிக்காவில் வேலை இருந்தால் போதாதா? என்று கூறி, அமெரிக்காவில் இருக்கும் இளைஞனுக்கு பெண்ணை கொடுக்க பலர் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், இப்போது அமெரிக்கா என்ற பெயரைக் கேட்டாலே, ‘போதும்… போதும்… அந்த கல்யாண உறவே வேண்டாம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் செயல்படும் கல்வி ஆலோசனை நிறுவனமான கான்வோகேஷன்ஸ் நிர்வாகி ஹிமபிந்து கூறுகையில், ‘அமெரிக்க அரசின் விசா கெடுபிடிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம். ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு டிரம்பின் அணுகுமுறை மாறினால் மட்டுமே பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், சிகாகோவில் வேலை செய்யும் ஒரு இளைஞருக்கும், ஐதராபாத்தின் சிக்கட்பள்ளியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிவானது. கடந்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அமெரிக்காவின் துணை விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளால், இரு குடும்பங்களும் இப்போது மறு ஆலோசனையில் உள்ளன. ‘அமெரிக்க இளைஞனைத்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்று கனவு கண்ட அந்தப் பெண், இப்போது ‘ஐதராபாத்தைச் சேர்ந்த எவரையும் திருமணம் செய்யத் தயார்’ என்று கூறுகிறார்.
அதேபோல் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர், அமெரிக்காவின் ஓஹியோவில் வசித்து வருகின்றனர். கணவருக்கு ஹெச்-1பி விசா உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை ஹெச்-4 விசாவில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அவர் அங்கு இரண்டு மூன்று நிறுவனங்களில் வேலை செய்து, அதை அரசிடம் பதிவு செய்திருந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அவர்கள் மீண்டும் அமெரிக்கா சென்றபோது, குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் அவரைத் தடுத்து, வேலை தொடர்பாக விசாரித்தனர். அவர் பணிபுரிந்ததாகக் கூறிய நிறுவனங்களின் மனிதவளத் துறைகள் இதை உறுதிப்படுத்தாததால், அவரது விசா முடக்கப்பட்டது. இதனால், அவர் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அமெரிக்கா செல்வதற்கான ஆவணங்களில் சிறிய விதிமீறல்கள் இருந்தால் கூட விசாக்கள் ரத்து செய்யப்படும் நிலை தற்போதுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இரண்டரை மாதங்களில் மட்டும், பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும், புதிதாக விசாவுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோர், தங்களது விசா நம்பிக்கைகளை இழந்துவிட்டனர். திருமணமாகி அமெரிக்காவில் ெசட்டிலாகிவிடலாம் என்று பெண் வீட்டார் நம்பியது இனிமேல் ஆகாது. அமெரிக்க திருமண உறவுகளுக்காக, புரோக்கர்களிடம் வரன் பார்க்க சொன்னவர்கள் கூட இப்போது பின்வாங்குகின்றனர்’ என்றார். டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா கட்டுப்பாடுகள், இந்தியர்களிடையே அமெரிக்காவைப் பற்றிய கனவை மாற்றியுள்ளன.
விசா பிரச்னைகள், நிச்சயமற்ற தன்மை, கிரீன் கார்டு உள்ளவர்களுக்குக்கூட உள்ள பாதுகாப்பின்மை ஆகியவை, திருமண உறவுகளை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன. இதனால், பழைய பாணி திருமண முறைகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன என்கின்றனர்.
The post அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்க மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடையாது: இந்திய பெற்றோரின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப் appeared first on Dinakaran.