வாஷிங்டன்: ‘அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’ என அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இந்தியா அதிக வரி வசூலிப்பதாக டிரம்ப் தொடர் குற்றச்சாட்டிய நிலையில் அவரது இந்த திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிகமான வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கும் பரஸ்பர வரியை ஏப்ரல் 2ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளார். இது இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கையை தவிர்க்க ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்கா சென்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, கனடா, மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
பின்னர் மெக்சிகோ அதிபர் தனிப்பட்ட முறையில் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதே போல, கனடா மீதான வரி விதிப்பையும் அவர் ஒத்திவைத்துள்ளார். ஆனால் அதிபர் டிரம்புடன் ஆழமான நட்புறவை கொண்டிருந்தாலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிடவில்லை. சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான் டிரம்ப் பரஸ்பர வரியை அறிமுகப்படுத்தப் போவதாக கூறினார்.
பிரதமர் மோடியிடமும் நேரடியாக அதைப் பற்றி பேசிய போதும் பிரதமர் மோடி எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இந்தியாவின் வரி விதிப்பை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கும் பிரதமர் மோடி தரப்பிலோ, ஒன்றிய அரசு தரப்பிலோ கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவகத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பொருளாதாரம், நிதி மற்றும் வர்த்தக விவகாரத்தில் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளாலும் அமெரிக்கா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியாவும் நம்மிடம் அதிக வரிகளை வசூலிக்கிறது. இந்தியாவில் எதையும் நாம் விற்க முடியாது. கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாம் அங்கு மிகக் குறைந்த வணிகத்தையே மேற்கொள்கிறோம். இப்போது இந்தியா தனது வரிகளை குறைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பது அம்பலமானதைத் தொடர்ந்து ஒப்புக் கொண்டுள்ளனர். சீனாவிலும் இதே நிலைதான்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நம்மை மிகவும் வஞ்சிக்கின்றன’’ என்றார். இந்தியா அதிக வரி வசூலிப்பதாக இந்த வாரத்தில் மட்டும் 3வது முறையாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில், திடீரென இந்தியா வரியை குறைக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் சந்திப்பின் போது இருதரப்பினருக்கும் நன்மை தரும் வகையில் இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில், விவசாய பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும், ஆயுதங்களை தங்களிடம் அதிகமாக வாங்க வேண்டுமெனவும் அமெரிக்கா அழுத்தம் தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் அதிபர் டிரம்ப், இந்தியா வரியை குறைக்க சம்மதித்துள்ளதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
* டிரம்ப் முன்னிலையில் அமைச்சர், எலான் மஸ்க் மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அரசின் செயல்திறன் துறையின் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோரின் சந்திப்பு கூட்டம் நடந்தது. அப்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில், எலான் மஸ்க் – மார்கோ ரூபியோ இடையே திடீர் கருத்து மோதல் ஏற்பட்டது. அரசுப் பணியாளர் குறைப்பு குறித்த பிரச்னையால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வெளியுறவு துறையை சேர்ந்த 1,500 பணியாளர்கள் முன்கூட்டியே பணியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறித்தும், இவ்விசயத்தில் முடிவெடுக்கும் எலான் மஸ்க்கிடம் இல்லை என்றும், தன்னிடமே அதிகாரம் உள்ளதாக மார்கோ ரூபியோ கூறினார். இதனால் தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் டிரம்ப் இதுகுறித்து அளித்த பேட்டியில், ‘இருவருக்குள்ளும் எந்த மோதலும் இல்லை; நான் அங்கு தானே இருந்தேன். எலான் மஸ்க்கும், மார்கோ ரூபியோவும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்’ என்றார்.
The post அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்: அதிபர் டிரம்ப் தகவல் appeared first on Dinakaran.