புதுடெல்லி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 299 புலம் பெயர்ந்தோர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டு, அவர்கள் பனாமா நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரம் அவமானகரமான செயலாக மாறி விட்டதாக காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் தன் எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடி டிரம்ப்பை பார்த்து பேசிய ஒருவாரத்துக்கு பிறகு, எங்கள் குடிமக்கள் மரியாதையுடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிலாக, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டது ஏன்? இந்தியர்கள் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நாடு கடத்தப்படுவதற்கு பிரதமர் மோடி எப்படி அனுமதித்தார்? இந்தியர்களை நாடு கடத்துவது தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்? என்ன ஒப்பந்தம் செய்தார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்காவுக்கு இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது அவமானகரமானது: காங். கடும் தாக்கு appeared first on Dinakaran.