டெல்லி: அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா-வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறப்புரிமை நோட்டீஸ் வழங்கியுள்ளார். மக்களவையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அண்மைக்காலமாக அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த நோட்டீஸில் தெரிவித்து இருப்பதாவது; ‘நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த டிச. 17 அன்று பேசிய அமித் ஷா, அவையின் சிறப்புரிமையை மீறும் வகையிலும் அவையை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளை கூறியுள்ளார். அவர் பேசியது அம்பேத்கரையும், அரசியலமைப்பையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. எனவே நாடாளுமன்ற விதிகள் மற்றும் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமித்ஷாக்கு எதிராக சிறப்புரிமை நோட்டீஸ் வழங்கினார் மல்லிகார்ஜுன கார்கே!! appeared first on Dinakaran.