திருமலை: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 20 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒரேநாளில் 73,301 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,242 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.4.14 கோடி காணிக்கையாக கிடைத்தது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் எம்பிசி அலுவலக பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று அதிகாலை முதல் திருமலையில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதில் அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டுள்ளனர். இவர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post அரையாண்டு விடுமுறை எதிரொலி; திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.