மும்பை: அவுரங்கசீப்பை பாராட்டி பேசியதால் சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டே ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி அளித்த பேட்டி ஒன்றில், ‘முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி; அவரது காலத்தில் இந்தியா ‘சோனே கி சிடியா’ என்று அழைக்கப்பட்டது’ என்றார். இவரது கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘எம்எல்ஏ அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் ஒரு துரோகி; சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியைக் கொன்ற அவுரங்கசீப்பை சிறந்த நிர்வாகி என்று புகழ்வது பெரும் பாவம். இவ்விசயத்தில் அபு ஆஸ்மி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். இவ்விவகாரம் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதால், சிவசேனா ஆதரவாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இரு காவல் நிலையங்களில் எம்எல்ஏ அபு ஆஸ்மி மீது வழக்குபதியப்பட்டது.
மன்குர்ட் சிவாஜி நகரைச் சேர்ந்த எம்எல்ஏ அபு ஆஸ்மி அளித்த மற்றொரு பேட்டியில், ‘எனது கருத்து தவறாக காட்டப்படுகிறது. அவுரங்கசீப் நாட்டில் பல கோயில்களைக் கட்டினார். அவுரங்கசீப்பை கொடூரமான நிர்வாகியாக கருதவில்லை. சத்ரபதி சம்பாஜி மகாராஜுக்கும், அவுரங்கசீப்புக்கும் இடையிலான போர், அரசு நிர்வாகத்திற்கான போர். அந்தப் போர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலானது போர் அல்ல. அவுரங்கசீப்பின் ஆட்சி காலத்தில், இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தான் வரை இருந்தது. அப்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதமாக இருந்தது’ என்றார்.
The post அவுரங்கசீப்பை பாராட்டி பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ மீது வழக்கு: துணை முதல்வர் ஷிண்டே ஆவேசம் appeared first on Dinakaran.