மும்பை: புத்தாண்டு நெருங்குவதை அடுத்து டிசம்பர் இறுதி வாரத்தில் உள்நாட்டு சுற்றுலா நகரங்களுக்கு பயணிப்பதற்கான விமான கட்டணங்கள் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளன. டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மும்பையில் இருந்து ஸ்ரீநகர், டேராடூன், கொச்சின், போர்ட் பிளேர், மதுரை உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கான விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மும்பையில் இருந்து அந்தமான் போர்ட் பிளேயருக்கு இரு வழி கட்டணமாக ரூ.54,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகருக்கு ரூ.44,000-ம், டேராடூனுக்கு ரூ.38,600-ம், திருவனந்தபுரத்துக்கு ரூ.37,300-ம் வசூலிக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் பாக்டோக்ராவுக்கு பயணிக்க 30,300-ம், கொச்சினுக்கு பயணிக்க ரூ.30,000ம், மும்பை – மதுரை இடையிலான இருவழி கட்டணம் ரூ.25,700ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் மும்பை – கொல்கத்தா இடையே ஒருவழி விமான கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படும் நிலையில், அது ரூ.17,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து ராஞ்சி, பாட்னா நகரங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மும்பைக்கும், டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான ஆண்டு இறுதி விமான பயண கட்டணம் இந்தமுறை அதிகளவில் உயர்த்தப்படாமல் ரூ.9,000 முதல் ரூ.13,000 என்ற அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டு இறுதி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளான டிசம்பர் 28, 29 தேதிகளில் பெருநகரங்களுக்கு இடையே விமானத்தில் பறக்க பயணிகள் இடையே ஆர்வம் அதிகம் காணப்படுவதாக பயண ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
The post ஆண்டிறுதியில் விமானத்தில் பயணிக்க மக்கள் ஆர்வம்: சுற்றுலா நகரங்களுக்கான விமானக் கட்டணம் உயர்வு! appeared first on Dinakaran.