திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நேற்று ஆரன்முளாவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி தொடங்கிய மண்டல கால பூஜைகள் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கடந்த 38 நாளில் நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றும் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இரவு 7 மணி வரை 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.
வரும் 25ம் தேதி மாலை இந்த தங்க அங்கி சன்னிதானத்தை அடையும். பின்னர் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடையும். மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க 25ம் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 26ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே ஆன்லைனில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்த இரு நாட்களிலும் தலா 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய முடியும்.
The post ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது: 26ம் தேதி மண்டல பூஜை appeared first on Dinakaran.