‘வரும்… ஆனா வராது…’ என்ற நகைச்சுவை வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு கச்சிதமாக பொருந்தும், ஆனால் கொஞ்சம் மாறுபட்ட வடிவில். அதாவது, ஒன்றிணைந்த நாளில் இருந்தே ‘இருக்கு, ஆனா இல்லை…’ என்கிற ரீதியில் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பயணித்துக் கொண்டிருக்கிறது இண்டியா கூட்டணி.
ஆரம்பம் முதலே நாளொரு சர்ச்சை, பொழுதொரு போட்டி என முரண்பாடுகளுடன் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த இண்டியா கூட்டணியில் இப்போது மீண்டும் ஒரு குழப்பச் சூழல். இந்த முறையும் குழப்பத்தை தொடங்கி வைத்திருப்பவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியே தான்!