கட்டுரை, சட்டம், சிந்தனைக் களம்

தொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை

முன்விரோதம் காரணமாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழகத்தையே அதிர்ச்சியில் தள்ளிய தலைகுனிவு. ஆளுங்கட்சி பின்னணியிலிருந்து வந்த அந்தக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் வேகமான, கடுமையான தண்டனையே இத்தகு குற்றங்களைக் குறைக்கும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையே கலைத்துப்போடப்பட்டிருக்கும் நெருக்கடியான இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்திலும் தனிமனித வக்கிரங்கள் இடையறாது குற்றங்களாக வெளிப்படுவதானது நம்மை நிலைகுலைய வைக்கிறது. எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியைப் போல, இந்தக் காலகட்டத்தில் பொதுவெளிக்கு எல்லாக் குற்றங்களும் வந்திடவில்லை என்றாலும், மாநிலம் முழுக்கக் குற்றங்களின் எண்ணிக்கை சன்னமாக அதிகரித்துவருகிறது.

கொள்ளைநோய்க் காலகட்டத்திலும் வழக்கம்போலவே சாதிய வன்மம் இந்தக் குற்றங்களிலும் முக்கியமான பங்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. சாதி வெறியின் காரணமாக தூத்துக்குடி அருகே நடந்த இரட்டைக் கொலையும், மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பணியாற்ற விடாமல் தடுத்ததும் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தலித் தலைவர்களை இழிவுபடுத்திய சம்பவமும், அதைப் படம்பிடித்த செய்தியாளர் தாக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. இத்தகைய வக்கிரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது விளிம்பு நிலையில் இருக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும்தான். இதுபோக, கஞ்சா கடத்தல், சட்ட விரோத மது விற்பனை, திருட்டு, வழிப்பறி என்று சில்லறைக் குற்றங்களும் நிறைய வெளிக்காட்டத் தொடங்கியிருக்கின்றன. வரலாற்றுரீதியாகவே கொள்ளைநோய் சூழும் காலத்தில் அடுத்து வறுமையும் அதற்கடுத்து குற்றங்களும் சூழ்வது வழக்கம். அப்படி நடக்காமலிருக்க, பசி சூழ்ந்திடாத வண்ணம் உதவிகள் பெருக வேண்டும்; கூடவே முன்கூட்டிய திட்டங்களோடு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல் துறை ஈடுபட வேண்டும். மேலதிகம் நடக்கும் தாக்குதல்கள், கொலை வெறிச் சம்பவங்களெல்லாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

ஊரடங்கின் விளைவாக வழக்கமான அரசியல் நடவடிக்கைகள் முடங்கிவிட்டிருக்கும் நிலையில், நிறையக் குற்றங்கள் வெளிக்கவனத்துக்கே வந்தடையாமல் புதையுண்டுபோகும் வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் மீறி புகார்களோடு காவல் நிலையங்களுக்கு வருவோர் ஆங்காங்கே அலைக்கழிக்கப்படுவதையும் கேட்க முடிகிறது. கரோனா பணிகளில் உள்ள காவல் துறையினர் வழக்கத்தைவிடவும் கூடுதலான பணி நெருக்கடியில் இருந்தாலும், குற்ற விசாரணையை அவர்கள் கையில் எடுப்பதன் வழியாகவே குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியும்; குற்றங்களைக் குறைக்க முடியும். குற்றத்தை நோக்கி நகர்வோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டம் இது.

SOURCE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *