புதுடெல்லி: “மாநிலங்களவையில் அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு எடுக்கப்பட்டதாக கூறுவது மக்களின் கவனத்தை திசை திருப்பும், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளின் விவாதத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் தந்திரம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம். நாங்கள் எழுப்பும் விவசாயிகள் பிரச்சினையை அவைத் தலைவரும் எழுப்பியுள்ளார். மோதானி (மோடி + அதானி) ஊழல் விவகாரத்தை நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இதுபோல் இன்னும் பல பிரச்சினைகள். இவற்றில் இருந்து எல்லாம் கவனத்தை திசை திருப்ப அவர்கள் புது பிரச்சினையை எழுப்புகிறார்கள்.