டெல்லி: உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில் முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டுவிட்டன. பொது அறிவு மற்றும் சிறந்த புத்திசாலித்தனம் ஆகியவற்றை பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
மேலும் போர் நிறுத்தம் குறித்து இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளதாவது; “இந்தியா-பாகிஸ்தான் இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழியேயான போர்நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இதற்காக, இரு தரப்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இரு நாட்டு தளபதிகள் மீண்டும் மே 12ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் தொடங்கிய போரானது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனால் இந்தியாவை சேர்ந்த 145 கோடி மக்களும், பாகிஸ்தானை சேர்ந்த 25 கோடி மக்களும் பெருமூச்சு விட்டுள்ளனர்.
The post இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்! appeared first on Dinakaran.