புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. கடந்த 7ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த வான்வழி தாக்குதல் மோதலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி என்ற பாகிஸ்தானின் போர் விமானம், பிரான்சால் தயாரிக்கப்பட்ட ரஃபேல் என்ற இந்திய விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறியுள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய விமானங்களை சீனாவின் ஜே-10சி விமானங்கள் பி.எல்-15 வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியது’ என்று கூறினார். ஆனால், இதனை இந்திய பாதுகாப்பு படை மறுத்துள்ளது. அதேநேரம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வான்வழி தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இந்தியா – பாகிஸ்தான் இடையே வான்வழியில் கிட்டதிட்ட ஒரு மணி நேரத்தில் 125 விமானங்கள் மோதிக் கொண்டன. சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வான்வழி போர்களில், இந்த தாக்குதல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த வான்வழி போரில், சீனாவின் ஜே-10சி மற்றும் பி.எல்-15 ஏவுகணைகளின் செயல்திறனை உலகளாவிய ராணுவ பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இரண்டு இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தாலும், பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தங்களது நாட்டிடம் இருந்து வாங்கிய ஒரு ரஃபேல் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சி.என்.என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட சம்பவத்தின் அடிப்படையில், சீன ஆயுதங்களின் மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவதாகவும், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆயுதங்களுக்கு சீன ஆயுதங்கள் சவாலாக அமைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வான்வழி மோதலின் வெற்றியை ஜே-10சி தயாரிப்பாளரான ஏவிக் செங்டு விமான நிறுவனம் கொண்டாடி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்கு விலை 36% உயர்ந்தது; அதே நேரம் ரஃபேல் தயாரிப்பாளரான டசோ விமான நிறுவனத்தின் பங்கு 1.64-5% சரிந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த மோதல், ரஷ்யா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளின் ஆயுதங்களின் திறனை சோதிக்கும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
The post இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை: சர்வதேச ஊடகங்களின் செய்தியால் பரபரப்பு appeared first on Dinakaran.