சண்டிகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் ஒன்றி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் அட்டாரி – வாகா எல்லையை மூடவும், இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வௌியேறவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அட்டாரி – வாகா எல்லை வழியாக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் வரும் மே 1ம் தேதிக்குள் அந்த வழியாக பாகிஸ்தான் திரும்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரி – வாகா எல்லையில் நேற்று காலை குவிந்தனர்.
இதுகுறித்து கராச்சியை சேர்ந்த ஷேக் பசல் அகமது கூறும்போது, “கடந்த 15ம் தேதி டெல்லியில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுக்கு வந்தோம். எங்களுக்கு இப்போது 45 நாள் விசா இருக்கிறது. ஆனால் நாங்கள் பாகிஸ்தான் திரும்புகிறோம்” என்றார். மேலும் அவர், “இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர நட்பையும், சகோதரத்துவத்தையும் நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு வெறுப்பு வேண்டாம்” என தெரிவித்தார். மன்சூர் என்ற பாகிஸ்தானியர், “கடந்த 15ம் தேதி 95 நாள் விசாவில் நாங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்தோம். இப்போது திரும்பி செல்கிறோம். பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க கூடாது அது கண்டிக்கத்தக்கது” என்றார். இதேபோல் பாகிஸ்தான் சென்ற இந்தியர்களும் நேற்று நாடு திரும்ப தொடங்கினர். இதனால் அட்டாரி – வாகா எல்லையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
The post இந்தியாவை விட்டு வௌியேற 48 மணி நேர கெடு அட்டாரி – வாகா எல்லையில் குவியும் பாகிஸ்தானியர்கள் appeared first on Dinakaran.