புதுடெல்லி: இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு அங்குள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்து துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ் கடந்த மாதம் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வங்கதேசத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி டிசம்பர் 9ம் தேதி டாக்காவுக்குச் செல்வார் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வழக்குகளில் சட்டப்பூர்வ உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் எதிர்பார்ப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்’ என்றார்.
* மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாக்.கிடம் வலியுறுத்தல்
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் பஹவல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாக வெளியான தகவல் வெளியானதை அடுத்து, அவர் மீது பாகிஸ்தானிடம் கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
The post இந்துக்கள் மீது தாக்குதல் எதிரொலி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார் வெளியுறவுத்துறை செயலர் appeared first on Dinakaran.