புதுடெல்லி: இன்றுடன் குறுகிய கால விசா கெடு முடிவதால் இதுவரை 419 பாகிஸ்தானியர்கள் வாகா எல்ைல வழியாக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் குடிமக்களை அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி, மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்களை அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஒன்றிய அரசின் முடிவின்படி, பாகிஸ்தானிய குடிமக்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து குறுகிய கால விசாக்களும் இன்றுடன் (ஏப். 27) முடிகிறது. பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் கெடு நாளை மறுநாளுடன் (ஏப். 29) முடிகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவில் தங்கியிருக்கும் அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களும் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் வாகா எல்லை வழியாக 450க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். நேற்று பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டவர்களில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) 2025 ஒளிபரப்பு நிறுவனத்தில் இருந்த 23 இந்தியர்களும் அடங்குவர். இதனுடன், 200 பாகிஸ்தானிய குடிமக்களும் இந்தியாவில் இருந்து அவர்களின் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
உத்தரபிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தான் குடிமக்களையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இன்னும் ஒரு பாகிஸ்தான் குடிமகன் எஞ்சியுள்ளதாகவும், அவர் ஏப்ரல் 30ம் தேதி பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்வார் என்றும் டிஜிபி பிரசாந்த் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். பீகாரின் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்த மொத்தம் 19 பாகிஸ்தானியர்கள் கடந்த 25ம் தேதி அல்லது அதற்கு முன்பு மாநிலத்தை விட்டு வெளியேறினர். மகாராஷ்டிராவில் 5,000 பாகிஸ்தானியர்கள் வசித்து வருவதாகவும், அவர்களில் 1,000 பேர் குறுகிய கால விசாக்களில் இருப்பதாகவும், அவர்களும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் யோகேஷ் கடம் தெரிவித்தார்.
சிலர் கடந்த 8-10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருவதாகவும், சிலர் இங்கு திருமணம் செய்து கொண்டதாகவும், சிலர் தங்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளை சமர்ப்பித்து இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் கண்டு உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க உதவுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை குறைந்தது 419 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post இன்றுடன் குறுகிய கால விசா கெடு முடிவதால் இந்தியாவிலிருந்து 419 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; வாகா எல்ைல வழியாக அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.