சென்னை: மத்திய அரசால் ஏற்கப்பட்ட ரூபாய் குறியீடு விஷயத்தில் இப்படி ஒரு சர்ச்சை நடக்கும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அதனை வடிவமைத்த தமிழரான டி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். நீங்கள் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை தமிழக அரசு நிராகரித்திருப்பது உங்கள் பணிக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயகுமார், “எங்கள் அனைத்து வடிவமைப்புகளும் வெற்றிகரமானதாகவோ அல்லது பாராட்டத்தக்கதாகவோ இருக்காது. விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்வது இயல்பானதே. ஒரு வடிவமைப்பாளராக, நீங்கள் எப்போதும் அவற்றை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலமே முன்னேறிச் செல்ல முடியும். எனவே, இந்த நடவடிக்கையை அவமரியாதையாகவோ அல்லது எனது பணியை புறக்கணிப்பதாகவோ நான் பார்க்கவில்லை.” என்று கூறினார்.