மும்பை: மும்பையில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், இயக்குனர் ராம் கோபால் வர்மாவை காசோலை மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. மகேஷ்சந்திர மிஸ்ரா என்ற வினியோகஸ்தர் தனது ஸ்ரீ என்ற நிறுவனம் மூலம் ராம்கோபால் வர்மாவுக்கு கடன் கொடுத்திருந்தார்.
அதை திருப்பி செலுத்த வர்மா கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாயன்று, இந்த வழக்கில் புகார்தாரருக்கு ரூ. 3.72 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
அபராதம் செலுத்தப்படாவிட்டால், வர்மா மேலும் மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. தீர்ப்பு நாளில் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. ராம்கோபால் வர்மா கூறும்போது, ‘எனது வழக்கறிஞர்கள் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், நான் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.
The post இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை appeared first on Dinakaran.