புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என சூர்யமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட ஆறு பேர் தனித்தனியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையத்தின் விசாரனைக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர், ‘‘இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஆகியவை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வியெழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசன்னா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ” இந்த விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்ப
வில்லை. மேலும் இதுதொடர்பான வழக்கும் அங்கு வரும் 27ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. எனவே நாங்கள் தலையிட்டு எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதே போல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த மனுவும் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post இரட்டை இலை சின்னம் விவகாரம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.