புதுடெல்லி: இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக குடும்பத்துடன் வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று காலை வந்தார். டெல்லி பாலம் விமான தளத்தில், வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். அதன்பின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். மாலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
வான்ஸ் மற்றும் உஷா தம்பதியை பிரதமர் மோடி வாசலுக்கு வந்து வரவேற்று அவர்களின் குழந்தைகளின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர், பிரதமர் மோடி, துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்த இரு தலைவர்களும், வரி விவகாரங்களில் உள்ள பரஸ்பர கவலைகளை பகிர்ந்து கொண்டனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து வான்ஸ், உஷா தம்பதியினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். டெல்லி பயணத்தை தொடர்ந்து இன்று ஜெய்ப்பூர் செல்லும் வான்ஸ், உஷா தம்பதியினர் பல்வேறு புராதன சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்கின்றனர்.
பாரம்பரிய உடையில் வந்த 3 குழந்தைகள்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உஷா தம்பதியினரின் 3 குழந்தைகளும், இந்திய பாரம்பரிய உடையில் விமானத்தில் இருந்து வந்திறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வான்சின் மூத்த மகன் இவான் (8 வயது), 2வது மகன் விவேக் (5) இருவரும் முறையே பழுப்பு மற்றும் மஞ்சள் நிற குர்தாவும், வெள்ளை நிற பைஜமாவும் அணிந்திருந்தனர். வான்சின் 3 வயது மகள் மிராபெல் பச்சை நிற அனார்கலி சூட் அணிந்திருந்தார். அக்சர்தாம் கோயில் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்ததாக அங்குள்ள குறிப்பு புத்தகத்தில் வான்ஸ் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
The post இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.