டெல்லி: இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல் 2025 வரையில் இந்தியாவில் 146.39 கோடி பேர் உள்ளனர். அவர்களில் ஜூன் 2025 வரையில் 142.39 கோடி பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.இறந்தவர்களின் பெயர்களை ஆதார் பட்டியலில் இருந்து நீக்குவது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பொறுப்பு.
இதன்படி, 2007 – 19 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கையானது 83.5 லட்சம் பேர் என்றுள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் இறந்தோர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரின் பெயர்கள் மட்டுமே ஆதார் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது, வெறும் 1.15 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் வழங்கும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்படும் புதுப்பிப்புகள் போன்ற தரவுகளைப் பொறுத்தே ஆதார் செயலிழப்புச் செயல்முறை உள்ளதால், இறந்தோரின் ஆதார் செயலிழப்பு சிக்கலானது என்று அதிகாரிகள் கூறி இருந்தனர் . இறந்தோரின் ஆதாரும் செயலாக்கத்தில் இருப்பதாகக் கூறி இருந்தனர்.
ஆகையால், இறப்போரின் முறையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டு, அவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டால்தான், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை தெரிய வரும் என குறிப்பிட்டிருந்த நிலையில் இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs) பதிவுசெய்யப்பட்ட இறப்புகளுக்கான myAadhaar போர்ட்டலில் ‘ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் புகாரளித்தல்’ என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது, இது தனிநபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மரணத்தைப் புகாரளிக்க உதவுகிறது.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட இறப்புப் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியப் பதிவாளர் ஜெனரலை (RGI) கோரியதாகவும், குடிமைப் பதிவு முறையை (CRS) பயன்படுத்தி 24 மாநிலங்கள் மற்றும் UTs இல் இருந்து சுமார் 1.55 கோடி இறப்புப் பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும் UIDAI தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில்”சரிபார்ப்புக்குப் பிறகு, சுமார் 1.17 கோடி ஆதார் எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. CRS அல்லாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 6.7 லட்சம் இறப்புப் பதிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் , மேலும் செயலிழக்கச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.குடும்ப உறுப்பினர் சமர்ப்பித்த தகவல்களின் உரிய சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு, இறந்த நபரின் ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று UIDAI தற்போது போர்ட்டலை மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைக்கும் செயல்முறையை நடத்தி வருகிறது.
The post இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.17 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கம்..!! appeared first on Dinakaran.