துபாய்: டெலிகிராம் லாபகரமான செயலியாக மாறியுள்ளதாக அதன் நிறுவனர் பாவல் டுரோவ் தெரிவித்துள்ளார். இப்போது 100 கோடி பயனாளர்களை கொண்டுள்ள டெலிகிராமின் பயன்பாடு வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்காளர்கள் தொடங்கி புரட்சியாளர்கள் வரை விரும்பி பயன்படுத்தும் செயலிகளில் டெலிகிராம் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறது. 2024ம் ஆண்டில் உலக அளவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு பின்னே டெலிகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 6வது இடத்தில் இருக்கிறது.
அதன் பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் தனித்துவமாக இருப்பதால் பயனாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெலிகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டது. டெலிகிராம் லாபகரமான நிறுவனமாக மாறியிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டில் பிரீமியம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்து 1.2 கோடியை தாண்டியது. இதனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாயை கடந்தாண்டு ஈட்டியது. மேலும், கிரிப்டோ சொத்துகளை தவிர்த்து 4,250 கோடி பணச் சேமிப்புகளுடன் இந்த ஆண்டே முடிகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் டெலிகிராம்வாங்கிய கடனை பெரும் பகுதியை திருப்பிச் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை பயன்படுத்தி நிறுவனத்தில் நிதி மேலாண்மையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் டெலிகிராம் நிறுவனர் தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் பரிசுகள் வழங்குதல், மற்றொரு செயலியை உருவாக்குதல், வணிகத்திற்காக தனி தளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட உள்ளதாக டெலிகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இளம் தலைமுறையினரை ஈர்க்கும் டெலிகிராம்: லாபகரமான செயலியாக மாறியுள்ளதாக நிறுவனர் பாவல் டுரோவ் தகவல்! appeared first on Dinakaran.