விசாகப்பட்டினம்: நவீன தொழில்நுட்ப பரிசோதனைக்கான 2 செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரித்துள்ளது. அதனை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக ‘ஸ்பேடக்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. அதாவது, ‘சேசர்’ (எஸ்டிஎக்ஸ்-01), ‘டார்கெட்’ (எஸ்டிஎக்ஸ்-02) என்ற இந்த 2 செயற்கைகோள்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும்.
இந்த இரு செயற்கைகோள்களும் ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1வது ஏவுதளத்தில் இருந்து வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து இறுதி கட்டப்பணியான கவுண்ட் டவுன் வரும் 29ம் தேதி இருக்க வாய்ப்பு உள்ளது.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், ராக்கெட் ஏவுவதை பார்வையிட விரும்பும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் குறித்த விவரங்களை https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
The post இஸ்ரோ தயாரித்துள்ள நவீன தொழில்நுட்ப பரிசோதனைக்கான 2 செயற்கைக்கோள்: வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது appeared first on Dinakaran.