சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். காரில் சென்ற பெண்களை 2 கார்களில் சென்ற 7 பேர் துரத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்; ஒரு கல்லூரி மாணவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்று மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அச்சுறுத்திய இளைஞர்கள் யார் என்பதை கண்டறியவும் அவர்களை பிடிக்கவும் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் நள்ளிரவு 2 மணியளவில் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், முட்டுக்காடு படகுகுழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்ப்பதற்காக காரை அங்கு நிறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்களின் கார்களுக்கு பின்னால் சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த இளைஞர்கள் பெண்களின் காரை நிறுத்தியுள்ளனர். இதனால் முதலில் அங்கிருந்து பெண்கள் சென்ற கார் கிளம்பி உள்ளது. இதையடுத்து, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளைஞர்கள் அவர்களது காரை கிளப்பியுள்ளனர்.
ஒருகட்டத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் தங்களது காரை இளம்பெண்களின் காருக்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர். பின்னர், அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர் இளம்பெண்கள் வந்த காரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து காரை தட்டி மிரட்டியதாக தெரிகிறது. மேலும், காருக்குள் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சின்னி திலங்க் என்பவர் கானாத்தூர் போலீஸில் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். தலைமறைவான இளைஞர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த விவகாரத்தில் 7 பேர் துரத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்தனர். கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட சம்பவம்; 5 பேர் கைது appeared first on Dinakaran.