ஈரோடு : ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தமிழக தேவாலயங்களில் பிரார்த்தனை, ஆராதனை போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, கடந்த 13ம் தேதி குருந்தோலை ஞாயிறும், 17ம் தேதி பெரிய வியாழனும் கடைபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 18ம் தேதி புனித வெள்ளி சிலுவை வழிபாடு நடந்தது.
இந்த நிலையில், ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை தேவாலயத்தில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு ஒளி வழிபாடும், திருமுழுக்கு புதுப்பித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக, ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்தெழும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டது. ஈஸ்டரையொட்டி புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதேபோன்று, ஈரோட்டில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம், ரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம், பி.பெ.அக்ரஹாரம் லூர்து மாதா ஆலயம், பெரிய சேமூர் செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் ஈஸ்டர் பண்டிகையொட்டி நேற்று அதிகாலை வரை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
The post ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.