டெல்லி: உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்துக்களின் மிக முக்கிய புனித நிகழ்வு மகா கும்பமேளா. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா நிகழ்வில் பல கோடி பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடப் பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையே கும்பமேளாவில் கூட்டம் அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பிரயாக்ராஜ் மஹாகும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக நான் முதலமைச்சர் யோகியுடன் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
The post உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!! appeared first on Dinakaran.