டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் திபெத்தின் எல்லையை ஒட்டி உள்ள மனா கிராமத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பனிச்சரிவு ஏற்பட்டதில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் தங்கியிருந்த கூடாரம் புதையுண்டது. அதில் தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்பு பணிக்கு 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். சாமோலி, டேராடூன் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சென்றனர். பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் எண்ணிக்கை 55 என்று கூறப்பட்டது. அதில் ஒரு தொழிலாளர் முறையாக விண்ணப்பிக்காமல் விடுமுறையில் சென்றிருந்தார்.
அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். இதில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 46 பேர் ஜோதிர்மத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
The post உத்தரகாண்டில் மேலும் 4 உடல்கள் மீட்பு பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது appeared first on Dinakaran.