உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-ல் நடைபெற்று வரும் கும்பமேளாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கூடாரம் ஒன்றில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த அதிர்வலை ஓய்வதற்குள் அடுத்து கும்பமேளாவில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18ல் உள்ள கூடாரம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உத்தரப்பிரதேச மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: திடீரென பற்றி எரிந்த கூடாரம்: பீதியில் பக்தர்கள்!! appeared first on Dinakaran.