உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார். படகோட்டி ஒருவருக்கு 130 படகுகள் உள்ளன, அவற்றின் உதவியுடன் அந்த படகோட்டி வருவாய் ஈட்டியுள்ளார். 45 நாட்களில் ஒவ்வொரு படகும் தலா ரூ.23 லட்சம் (நாள் ஒன்றுக்கு ஒரு படகு ரூ.50,000) வருவாய் ஈட்டித் தந்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ந்தேதி நிறைவுபெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும், விழா சிறப்பாக நடைபெற்றதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், 45 நாட்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்த இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில், எதிர்பார்த்ததற்கும் மேலாக 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில், 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சித்தன.
சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை. மகா கும்பமேளாவிற்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 3 லட்சம் கோடி வணிகத்தில் சாதனை படைத்துள்ளது. மகா கும்பமேளாவின் பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று கூறினார்.
இதனிடையே, கும்பமேளாவில் படகு ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், நான் ஒரு படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அவர்களிடம் 130 படகுகள் உள்ளன. கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் அவர்கள் ரூ. 30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். ஒவ்வொரு படகும் ரூ. 23 லட்சம் சம்பாதித்துள்ளது. தினசரி அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு படகிலிருந்தும் ரூ. 50,000-52,000 சம்பாதித்தனர் என்றார்.
The post உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் படகோட்டி ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர் appeared first on Dinakaran.