புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் நிலையான கொள்கை மற்றும் சிறந்த வணிகசூழல் மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு அரசின் நிலையான கொள்கைகளை நாடு கண்டு வருகிறது.
உலகின் பல நாடுகளில் தற்போது அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், முழு உலக நாடுகளும் இந்தியாவை ஒரு வளர்ச்சி மையமாக பார்க்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக பொருளாதாரம் மந்தமடைந்தபோது, இந்தியா உலகளாவிய வளர்ச்சியை துரிதப்படுத்தியது. தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்து செல்வதன் மூலமும், சீர்திருத்தங்களை விரைவுப்படுத்துவதன் மூலமும் இது சாத்தியமானது.
இந்த முயற்சிகள் பொருளாதாரத்தில் கொரோனா தாக்கத்தை குறைத்து, இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற உதவியது. உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா திகழ்கிறது. சவாலான காலங்களில் அதன் தாங்கும் திறனை இந்தியா நிரூபித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சீர்திருத்தங்கள், நிதிசார் அறநெறி, வௌிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா தன் உறுதிப்பாட்டை தொடர்ந்து வௌிப்படுத்தி உள்ளது. தற்போது உலகின் ஒவ்வொரு நாடும் இந்தியாவுடனான பொருளாதார கூட்டணியை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்த கூட்டணியின் அதிகபட்ச பயன்களை பயன்படுத்தி கொள்ள நம் உற்பத்தித்துறை முன்வர வேண்டும்” என இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
The post உலகமே இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக பார்க்கிறது: தொழில்துறை பயன்படுத்தி கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.