புதுடெல்லி: “இந்தியாவை உலகின் 3வது பொருளதார நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டு அரசு பயணிக்கிறது” என குடியரசு தலைவர் முர்மு கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘அனைவருக்கும் வீடு” வழங்கும் இலக்கை அடைய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை விரிவுபடுத்தி, கூடுதலாக மூன்று கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக 5,36,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனது அரசின் இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் பணிகளின் வேகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கைகள் அசாதாரண வேகத்தில் செயல்படுத்தப்படுவதை நாடு காண்கிறது.
கூடுதலாக, ஒரு கோடி இளைஞர்களுக்கு சிறந்த 500 நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும். வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்கவும், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 17 புதிய வந்தே பாரத் ரயில்களும் ஒரு நமோ பாரத் ரயிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘‘ஒரே நாடு-ஒரே தேர்தல்” மற்றும் ‘‘வக்ஃப் சட்டத் திருத்தம்” போன்ற முக்கியமான பிரச்னைகளிலும் அரசு விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கி அரசு பயணிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணம் நமது அரசியலமைப்பின் லட்சியங்களால் தொடர்ந்து வழிநடத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசு அதன் நிர்வாகத்தின் மையத்தில், சேவை, நல்லாட்சி, செழிப்பு, பெருமை ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளைச் செயல்படுத்துகிறது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு விரைவான முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.
அரசின் வழிகாட்டும் மந்திரம் ‘‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை” என்பதாகும். அதன் குறிக்கோள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’வை உருவாக்குவது. வளர்ச்சியின் நன்மைகள் சமூகத்தின் கடைசிபடியில் நிற்கும் நபரையும் சென்றடையும் போதுதான் அது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏழை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வழங்கப்படும்போது, அது வறுமையை எதிர்த்துப் போராட உதவும் அதிகாரமளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
25 கோடி மக்கள் வறுமையை வென்று வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். அவர்கள் ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளனர். மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா, புத்தொழில் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற முயற்சிகள் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு சாதனை அளவில் 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகளை வழங்கியுள்ளது. கொள்கை முடக்கத்திலிருந்து பொருளாதாரத்தை வெளியே கொண்டு வரும் உறுதியான தீர்மானத்துடன் அரசு பணியாற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை appeared first on Dinakaran.