* இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு எட்டாத அளவு இருக்கும்
மதுபானி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ‘‘உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை வேட்டையாடுவோம். நமது பதிலடி கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கும்’’ என ஆவேசமாக பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டம் பைசரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தடை செய்யப்பட்ட நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட் (டிஆர்எப்) தீவிரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா சென்றவர்கள். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பாகிஸ்தான் மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டதோடு, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் நேரில் அழைக்கப்பட்டு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பதில் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த தாக்குதலை இந்திய அரசே திட்டமிட்டு நடத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாடினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை குறிக்கும் நிகழ்ச்சி பீகாரின் மதுபானியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று நாடு முழுவதும் உள்ள பயனாளிகளிடம் பேசினார். முன்னதாக, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலரும் தங்களின் அன்புக்குரிய மகன்களை, சகோதரர்களை மற்றும் கணவன்மார்களை இழந்துள்ளனர். மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, பீகார் என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்கில் முதல் கன்னியாகுமரி வரை எங்களின் சோகமும், கோபமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு அமைதியும் பாதுகாப்பும் மிகவும் அவசியமானவை. இன்று பீகார் மண்ணில் இருந்து கூறுகிறேன், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு தீவிரவாதிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டறிந்து கண்டிப்பாக தண்டிப்போம். உலகின் முற்றுப்புள்ளி வரையிலும் அவர்களை பின்தொடர்ந்து தண்டிப்போம். இந்தியாவின் ஆன்மாவை தீவிரவாதத்தால் ஒருபோதும் உடைக்க முடியாது. தீவிரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். நமது பதிலடி கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கும். தீவிரவாதிகளின் மீதமுள்ள மண்ணை பறிக்கும் நேரம் வந்துவிட்டது (உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இவற்றை ஆங்கிலத்தில் பிரதமர் மோடி கூறினார்). நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த தீர்மானத்தில் ஒட்டுமொத்த தேசமும் உறுதியாக உள்ளது.
மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் எங்களுடன் துணை நின்ற அனைத்து உலக நாடுகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாடும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் முதுகெலும்பை உடைக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் ஆவேசமாக தாக்கிப் பேசினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடு முழுவதும் குரல்கள் எழுந்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜி20 நாடுகளின் தூதர்களிடம் விளக்கம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிநாடுகளின் தூதர்களுக்கு ஒன்றிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கினார். இந்த கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் சீனா போன்ற ஜி20 உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மலேசியா உள்ளிட்ட இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர்.
குடியரசு தலைவருடன் அமித்ஷா சந்திப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் நேற்று சந்தித்து பேசினர். இதுதொடர்பான புகைப்படத்தை குடியரசு தலைவரின் அலுவலகம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது.
அட்டாரி-வாகா எல்லையில் வீரர்கள் கைகுலுக்க தடை
இந்தியா, பாகிஸ்தானை பிரிக்கும் அட்டாரி-வாகா எல்லையில் தினந்தோறும் மாலை இரு நாட்டு கொடிகளும் இறக்கும் நிகழ்ச்சி நடக்கும். இது மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டவர்களும் குவிவது வழக்கம். கொடியிறக்கி முடித்ததும் இரு நாட்டு வீரர்களும் கை குலுக்கிக் கொள்வார்கள். தற்போது பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளின் வாயில்களும் மூடப்பட்டிருக்கும் என எல்லை பாதுகாப்பு படை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, எல்லை தாண்டிய தாக்குதல்கள் மீதான இந்தியாவின் தீவிர அக்கறையை காட்டுவதாகவும், அமைதியும், ஆத்திரமூட்டலும் இணைந்து வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்துவதுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போல, பஞ்சாப் எல்லையில் ஹுசைனிவாலா (பெரோஸ்பூர் மாவட்டம்) மற்றும் சட்கி (அபோஹர் மாவட்டம்) ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்வுகளிலும் கைகுலுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் வழக்கம் போல் நடைபெறுகிறது.
பிஎஸ்எப் வீரரை கைது செய்த பாக். ராணுவம்
பஹல்காம் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்செயலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த 182வது பட்டாலியன் கான்ஸ்டபிள் பி.கே.சாஹு, பஞ்சாப்பின் பெரோஸ்பூர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விவசாயிகளுடன் மரத்தடி நிழலில் ஓய்வெடுக்க முன்னோக்கி சென்ற அவர் தவறுதலாக எல்லை தாண்டி உள்ளார். இதனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை கைது செய்துள்ளனர். கைதான வீரர் சீருடையுடனும் துப்பாக்கியையும் ஏந்தி உள்ளார். அவரை விடுவிக்க இரு படைகளுக்கும் இடையே கொடி அணிவகுப்பு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வு அசாதாரணமானது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
எல்லையில் போர் பதற்றம்
காஷ்மீரில் கடந்த 2016, 2019ல் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது இந்தியா எல்லை தாண்டி பதிலடி தந்தது. இதனால் இம்முறையும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.
The post உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம் appeared first on Dinakaran.