திருமலை: உலகிலேயே முதல்முறையாக ஆந்திர மாநில அரசின் 161 சேவைகளை வாட்ஸ்அப் செயலி மூலம் வீட்டிலிருந்தே பெற புதிய வசதி முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழக்கம். தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், அவரது மகனுமான லோகேஷூக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்காக மெட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வாட்ஸ் ஆப் செயலி மூலம் பொதுமக்களுக்கு வீட்டிலிருந்து அனைத்து சான்றிதழ்களும் பெற ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் அரசின் 161 விதமான சேவைகளை பெரும் மன மித்ரா என்ற பெயரிலான வாட்ஸ்அப் கவர்னென்ஸ் சேவையை மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேற்று உண்டவள்ளியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து துவக்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் லோகேஷ் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள் அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ் அப் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் சேவை 9552300009 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆந்திர அரசு வாட்ஸ்அப் மூலம் சிவில் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் மூலம் 161 சேவைகள் வழங்கப்படும். இதில் இந்து அறநிலையத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து கழகம், வருவாய்த்துறை, அண்ணா கேண்டீன், நகராட்சி துறை ஆகிய துறைகளின் சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.
இதனால் சான்றிதழுக்காக மக்கள் அரசு அலுவலகங்களை சுற்றி வரும் வழக்கத்திற்கு ஆந்திர அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விரைவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளும் இதன் கீழ் கொண்டுவரப்படும். வருவாய் துறை மூலம் பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை, பத்திரப்பதிவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது, சாதி, வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களை பெறுவது ஆகிய சேவைகளையும் இதன் மூலம் பெறலாம். உலகிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் இந்த சேவை கொண்டுவரப்படுகிறது என்றார்.
The post உலகிலேயே முதல்முறையாக 161 அரசு சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வீட்டிலிருந்தே பெறலாம்: ஆந்திர மாநில அரசு புதிய ஏற்பாடு appeared first on Dinakaran.